ஐபிஎல் 2024: ஆயூஷ் பதோனி அதிரடியால் தப்பிய லக்னோ; டெல்லி அணிக்கு 168 டார்கெட்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் 17ஆவது சீசனின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்ற குயின்டன் டி காக் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கலும் 3 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் கலீல் அஹ்மத் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் கேஎல் ராகுலுடன் இணைந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் கடந்த போட்டியில் அரைசதம் அடித்ததைப் போன்று இப்போட்டியிலும் சிறப்பாக விளையாடி அணியை கரைசேர்ப்பார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால், 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஸ்டொய்னிஸின் விக்கெட்டை குல்தீப் யாதவ் கைப்பற்றினார்.
Trending
இதையடுத்து களமிறங்கிய அணியின் துணைக்கேப்டன் நிக்கோலஸ் பூரனும் தனது முதல் பந்திலேயே குல்தீப் யாதவ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இருப்பினும் அதிரடியாக விளையாடி வந்த கேஎல் ராகுல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 39 ரன்களை எடுத்து குல்தீப் யாதவின் அடுத்த ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா 10 ரன்களுக்கும், குர்னால் பாண்டியா 03 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த அணியின் இளம் வீரர்கள் ஆயூஷ் பதோனி - அர்ஷத் கான் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 8ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சவாலான இலக்கை நோக்கி அழைத்துச்சென்றனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆயூஷ் பதோனி 31 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இந்த சீசனில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய பதோனி, இன்றைய போட்டியில் லக்னோ அணி இக்கட்டான சூழலில் இருந்த போது களமிறங்கி அரைசதம் அடித்து அசத்தினார்.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயூஷ் பதோனி 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 55 ரன்களையும், அர்ஷத் கான் 2 பவுண்டரிகளுடன் 120 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து 8ஆவது விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஐபிஎல் தொடர் வராலற்றில் 8ஆவது விக்கெட்டிற்கு அதிக ரன்களை சேர்த்த ஜோடி எனும் சாதனையையும் படைத்தது. இதன்மூலம் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அஹ்மத 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now