
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 60ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தமதமானது. அதன்பின் 16 ஓவர்கள் கொண்ட போட்டியாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சிக்ஸருடன் இன்னிங்ஸைத் தொடங்கிய பில் சால்ட் 6 ரன்களிலும், சுனில் நரைன் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் க்ளீன் போல்டாகினார். இதனால் கேகேஆர் அணி 40 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த வெங்கடேஷ் ஐயர் - நிதீஷ் ரானா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 42 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிதீஷ் ரானாவும் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் 6ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கி அதிரடி காட்டிய ஆண்ட்ரே ரஸலும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 24 ரன்களில் நடையைக் கட்டினார்.