ஐபிஎல் 2024: ருதுராஜ் கெய்க்வாட் முதல் அரைசதம்; கேகேஆரை வீழ்த்தியது சிஎஸ்கே!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சென்னையிலுள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பில் சால்ட், சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த சுனில் நரைன் - அறிமுக வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் முறையில் 56 ரன்களைச் சேர்த்தனர். அதன்பின் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 24 ரன்கள் எடுத்திருந்த அங்கிரிஷ் ரகுவன்ஷியும், 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 27 ரன்கள் எடுத்திருந்த சுனில் நரைனும் அடுத்தடுத்து ரவீந்திர ஜடேஜா ஓவரில் விக்கெட்டை இழந்தனர்.
Trending
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களுக்கும், ரமந்தீப் சிங் 13 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரிங்கு சிங் ரன்களைச் சேர்க்க தடுமாறி வந்த நிலையில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 9 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸலும் சிஎஸ்கே பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார்.
அதன்பின் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆண்ட்ரே ரஸலும் விக்கெட்டை இழக்க, அணியின் நம்பிக்கையாக இருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே சேர்த்தது. சிஎஸ்கே அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா, துஷார்தேஷ் பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், முஸ்தஃபிசூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்தரா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கத்தில் நிதானம் காட்டினாலும், ஓவர்கள் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 3 பவுண்டரிகளுன் 15 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ரச்சின் ரவீந்திரா தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ருதுராஜுடன் இணைந்த டேரில் மிட்செல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவையான நேரத்தில் பவுண்டரிகளை அடித்து ஸ்கோரையும் உயர்த்தினார்.
தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேரில் மிட்செல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 25 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரைன் பந்துவீச்சில் அடிக்க முயற்சித்து க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதேசமயம் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு ஐபிஎல் சீசனில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அடித்த முதல் அரைசதமாகவும் இது பதிவானது.
அவருடன் இணைந்த ஷிவம் தூபேவும் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றார். அதன்பின் ஷிவம் தூபே ஒரு பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 28 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 8 பவுண்டரிகளுடன் 67 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் 3ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now