
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹீமாச்சல் பிரதேசம் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை பெட்டிங் செய்ய அழைத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அறிமுக வீரர் வித்வாத் கவெரப்பா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வில் ஜேக்ஸும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசிய நிலையில் 12 ரன்களில் கவெரப்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனால் ஆர்சிபி அணி 43 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து விராட் கோலியுடன் இணைந்த ராஜத் பட்டிதார் தொடக்கம் முதலே சிக்ஸர்களாக விளாசித்தள்ளினார். அவருக்கு துணையாக விராட் கோலியும் பவுண்டரிகளை விளாச இருவரது பார்ட்னஷிப்பும் 60 ரன்களைத் தாண்டியது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜத் பட்டிதார் 19 பந்துகளில் தனது அரைசதத்தை விளாசினார்.