Advertisement

ஐபிஎல் 2024: இறுதிவரை போராடிய மும்பை இந்தியன்ஸ்; டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!

ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 27, 2024 • 19:46 PM
ஐபிஎல் 2024: இறுதிவரை போராடிய மும்பை இந்தியன்ஸ்; டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: இறுதிவரை போராடிய மும்பை இந்தியன்ஸ்; டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி! (Image Source: Google)
Advertisement

17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 43ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்ல் கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் அபிஷேக் போரல் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் அபிஷேக் போரல் ஒருப்பக்கம் நிதானம் காட்டம், மறுமுனையில் எந்த பந்துவீச்சாளரையும் பாரபட்சம் பார்க்காமல் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி தள்ளினார். இதன்மூலம் 15 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்களைக் குவித்தது. பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 84 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Trending


பின்னர் மறுபக்கம் அதிரடி காட்டிய அபிஷேக் போரெலும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஷாய் ஹோப் மற்றும் கேப்டன் ரிஷப் பந்த் இணை ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி வந்த ஷாய் ஹோப் 5 சிக்ஸர்களுடன் 41 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் ரிஷப் பந்துடன் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தொடக்கத்தில் நிதானம் காட்டினாலும், இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 

அதேசமயம் ரிஷப் பந்த் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அடுத்து களமிறங்கிய அக்ஸர் படேல் தனது பங்கிற்கு 11 ரன்களைச் சேர்க்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களைச் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா, பியூஷ் சாவ்லா, முகமது நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 8 ரன்களுக்கும், அதிரடியாக தொடங்கிய இஷான் கிஷன் 20 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 6 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களைச் சேர்த்தது. 

அதன்பின் திலக் வர்மாவுடன் இணைந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாச, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 71 ரன்களை எட்டியது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 46 ரன்களை எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நெஹால் வதேரா 4 ரன்கள் மட்டுமே எடுத்து அதே ஓவரில் விக்கெட்டை இழந்தார். 

ஆனாலும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த திலக் வர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவருக்கு துணையாக டிம் டேவிட்டும் சில பவுண்டரிகளை விளாசினார். இருப்பினும் அந்த அணி வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 65 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டது. அப்போது இன்னிங்ஸின் 18ஆவது ஓவரை முகேஷ் குமார் வீச, அந்த ஓவரை எதிர்கொண்ட டிம் டேவிட் முதல் மூன்று பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என விளாசிய நிலையில், அடுத்த பந்தையும் அடிக்க முயன்று எல்பிடபிள்யூ முறையில் 37 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் அந்த ஓவரில் மும்பை அணி 23 ரன்களை சேர்த்தது.

இதனால் கடைசி 2 ஓவர்களில் மும்பை அணி வெற்றிக்கு 41 ரன்கள் என்ற இலக்கு இருந்தது. இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை ரஷிக் தார் வீசா, அந்த ஓவரில் முகமது நபி விக்கெட்டை இழந்தாலும் மும்பை அணி 16 ரன்களைச் சேர்த்தது. இதனால் கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தின் மீதான பரபரப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறியது. ஆனால் அச்சமயத்தில் அதிரடியாக விளையாடி வந்த திலக் வர்மா 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 63 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பியதால் மும்பை அணியின் தோல்வியும் உறுதியானது. 

பின்னர் களமிறங்கிய வீரர்களாலும் போதிய ரன்களைச் சேர்க்க முடியாததால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் ரஷிக் தார் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு சீசனில் 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளதுடன் புள்ளிப்பட்டியலின் 5ஆம் இடத்திற்கும் முன்னேறியது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement