ஐபிஎல் 2024: டெல்லி அணிக்கு பயத்தை காட்டிய அர்ஷத் கான்; சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் கேகேஆர் அணி பிளே ஆஃப் சுற்றை உறுதிசெய்தும், பஞ்சாப், மும்பை, குஜராத் அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பையும் இழந்தும் உள்ள நிலையில், மீதமிருக்கும் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் - அபிஷேக் போரல் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் முதல் ஓவரிலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்க்கொடுத்தார். அதன்பின் அபிஷேக் போரலுடன் இணைந்த ஷாய் ஹோப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
Trending
இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷாய் ஹோப் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் போரல் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 58 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் போரலின் விக்கெட்டை நவீன் உல் ஹக் கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்களை எடுத்த நிலையில் ரிஷப் பந்து ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபக்கம் தனது அதிரடியைக் கைவிடாத டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அத்துடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டப்ஸ் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 57 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய அக்ஸர் படேல் 7 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் கேஎல் ராகுல் 5 ரன்களிலும், குயின்டன் டி காக் 12 ரன்களிலும் என இஷாந்த் சர்மாவின் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 5 ரன்களிலும், தீபக் ஹூடா ரன்கள் ஏதுமின்றியும், ஆயூஷ் பதோனி 6 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் தள்ளாடியது. அதேசமயம் 5ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் முதல் பந்தில் இருந்தே சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசினார்.
தொடர்ந்து பவுண்டரிகளாக பறக்கவிட்ட நிக்கோலஸ் பூரன் 20 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் நம்பிக்கை கொடுத்தார். அவருக்கு துணையாக குர்னால் பாண்டியாவும் ஸ்டிரைக்கை ரெட்டேட் செய்து வந்தார். அதன்பின் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து குர்னால் பாண்டியாவும் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ அணியின் தோல்வியும் உறுதியானதாக டெல்லி அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
ஆனால் இப்போட்டியில் 8ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய அர்ஷத் கான் டெல்லி அணி பந்துவீச்சாளர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார். ஒருபக்கம் அர்ஷத் கான் சிக்ஸர்களை பறக்கவிட, இப்போட்டியில் வாய்ப்பு பெற்ற யுத்விர் சிங்கும் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 14 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனாலும் தனது அதிரடியைக் கைவிடாத அர்ஷத் கான் அபாரமாக விளையாடி 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதனால் லக்னோ அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 29 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால் முகேஷ் குமார் வீசிய 19ஆவது ஓவரில் லக்னோ அணியால் 6 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் கடைசி ஓவரில் லக்னோ அணி வெற்றிக்கு 23 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த அணியால் 3 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதில் இறுதிவரை போராடிய அர்ஷத் கான் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 58 ரன்களைச் சேர்த்தார். இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now