
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரியான் பராக்கின் அபார ஆட்டத்தின் மூலமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் 185 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் பராக் 7 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 84 ரன்களை குவித்தார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தாலும், ராஜ்ஸ்தான் அணி பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸும் 44 ரன்களைச் சேர்த்து போராடிய நிலையிலும் டெல்லி அணியால் இலக்கை எட்டமுடியவில்லை.
இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியதுடன், நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியையும் பதிவுசெய்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரியான் பராக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.