
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 41ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
பின் 25 ரன்களில் கேப்டன் டு பிளெசிஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வில் ஜேக்ஸும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் விராட் கோலியுடன் இணைந்த ராஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 50 ரன்கள் எடுத்த நிலையில் ராஜத் பட்டிதார் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலியும் தனது அரைசதத்தை பதிவுசெய்த கையோடு, 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேமரூன் க்ரீன் ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர, மறுபக்கம் களமிறங்கிய மஹிபால் லாம்ரோர் 7 ரன்களுக்கும், தினேஷ் கார்த்திக் 11 ரன்களுக்கும், ஸ்வப்நில் சிங் 12 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 37 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைச் சேர்த்தது. ஹைதராபாத் அணி தரப்பில் ஜெய்தேவ் உனாத்கட் 3 விக்கெட்டுகளையும், நடராஜன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.