
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பில் சால்ட், மார்கோ ஜான்சென் ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்சர்களை விளாசி மிரட்டினார். அதேசமயம் மறுபக்கம் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த சுனில் நரைன் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களுக்கும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ரானாவும் 9 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த பில் சால்ட் - ரமந்தீப் சிங் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரமந்தீப் சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு பவுண்டரி, 4 சிக்சர்கள் என 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பில் சால்ட் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 54 ரன்களில் பில் சால்ட்டும் தனது விக்கெட்டை இழந்தார்.