
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து டெல்லி அணியை பந்துவீச அழைத்தார்.
இதனையடுத்து பேட்டிங்கைத் தொடர்ந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் குயின்டன் டி காக் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல்லும் 3 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் அஹ்மத் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் கேஎல் ராகுலுடன் இணைந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக விளையாடும் முனைப்புடன் இன்னிங்ஸைத் தொடர்ந்தார். இந்நிலையில் இப்போட்டியின் 8ஆவது ஓவரை குல்தீப் யாதவ் வீச அதனை எதிர்கொண்ட மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிக்சர் அடிக்கும் முயற்சியில் பந்தை சரியாக கணிக்க தவறினார். இதனால் பந்து அவரது பேட்டில் பட்டு பாய்ண்ட் திசையில் இருந்த இஷான் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.