
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதில் நாளை நடைபெறும் 48ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது. அதேசமயம் மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியோ விளையாடிய 9 போட்டிகளில் 6 தோல்விகள், 3 வெற்றிகளை மட்டுமே பதிவுசெய்து 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 9ஆம் இடத்தில் உள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் இடம்பிடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக பங்கேற்காமல் இருந்துவரும் மயங்க் யாதவ், நாளைய போட்டியில் விளையாடும் பட்சத்தில் அது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மிகப்பெரும் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.