ஐபிஎல் 2024: கடைசி பந்துவரை போராடிய குஜராத்; 4 ரன்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்ற 40ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பிரித்வி ஷா - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை வழக்கம் போல் தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 23 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களை எடுத்திருந்த பிரித்வி ஷாவும் அதே ஓவரில் சந்தீப் வாரியரிடம் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷாய் ஹோப் 5 ரன்கள் மட்டுமே எடுத்து சந்தீப் வாரியர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
Trending
பின்னர் ஜோடி சேர்ந்த அக்ஸர் படேல் - கேப்டன் ரிஷப் பந்த் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். அதன்பின் இருவரும் அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்ஸர்களும் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய வந்த அக்ஸர் படேல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியார். இதில் அதிரடியாக விளையாடிய அகஸர் படேல் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 66 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
ஆனாலும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் அவருடன் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பந்த் 5 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 88 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விருத்திமான் சஹா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அதேசமயம் கேப்டன் ஷுப்மன் கில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய சாய் சுதர்ஷன் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தனது இன்னிங்ஸைத் தொடங்கினார். இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் முதல் 6 ஓவர்களில் 67 ரன்களைச் சேர்த்து அசத்தினர். பின் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் விருத்திமான் சஹா விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்ஷன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக டேவிட் மில்லரும் பவுண்டரிகளை அடிக்க அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. பின் அதிரடியாக விளையாட முயற்சித்த சாய் சுதர்ஷன் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 65 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷாரூக் கான் 8 ரன்களுக்கும், ராகுல் திவேத்தியா 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஆனால் அதேசமயம் மறுபக்கம் தனது சுயரூபத்தைக் காட்டத்தொடங்கிய டேவிட் மில்லர், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே வீசிய 17ஆவது ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என விளாசியதுடன், 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் கடைசி மூன்று ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிக்கு 49 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. இதனால் எந்த அணி வெற்றி இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குஜராத் அணியின் நம்பிக்கையாக இருந்த டேவிட் மில்லர் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 55 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
இதன் காரணமாக கடைசி இரண்டு ஓவர்களில் குஜராத் அணி வெற்றிக்கு 37 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அச்சமயத்தில் சாய் கிஷோர் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசி, கடைசி ஓவருக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் வீசிய கடைசி ஓவரில் ரஷித் கான் முதலிரண்டு பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்து அசத்தினார். ஆனால் அதன்பின் சூதாரித்து பந்துவீசிய முகேஷ் குமார் அடுத்தடுத்து பந்தகளில் ரன்கள் கொடுக்காமல் டாட் பந்துகளை வீசினார். இதன் காரணமாக கடைசி இரண்டு பந்துகளுக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
அதன்பின் 5ஆவது பந்தை சிக்ஸர் விளாசிய ரஷித் கான், கடைசி பந்தில் பவுண்டரி அடிக்க தவறினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now