நான் பந்துவீசுவதை பார்த்து அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் நம்புகிறேன் - அபிஷேக் சர்மா!
தற்போது நான் சிறப்பாக பந்துவீசுவதை பார்த்து யுவராஜ் சிங் மிகவும் மகிழ்ச்சியடைவார் நம்புகிறேன் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
Trending
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது தற்சமயம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இறுதிப்போட்டியானது நாளை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முன்னதாக நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற்று அசத்தியதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக தனது பந்துவீச்சு குறித்து பேசிய அபிஷேக் சர்மா, “என் தந்தை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார், ஏனெனில் அவரும் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர். எனது பந்துவீச்சில் அவர் கடுமையாக உழைத்து வருகிறார். எப்படியாவது, நான் எனது பந்துவீச்சில் தொடர்ந்து பணியாற்றினால், எனது அணிக்கு பங்களிக்க முடியும் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் ஜூனியர் கிரிக்கெட்டில் இருந்து நான் நிறைய பந்துவீசுகிறேன்.
இந்த வாய்ப்புக்காக காத்திருந்தேன். இது எளிதானது அல்ல, எனது கேப்டன் மற்றும் பயிற்சியாளரை நான் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது, ஏனென்றால் அவர்கள் நான் அதிகம் பந்துவீசுவதை பார்த்ததில்லை. நான் யுவராஜ் சிங்குடன் எனது பந்துவீச்சு பற்றி பேசும் போதெல்லாம், நான் அவரை விட சிறந்த பந்துவீச்சாளராக இருக்க முடியும் என்று அவர் கூறுவார். அதனால் தற்போது நான் பந்துவீசுவதை பார்த்து அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் நம்புகிறேன்.
நான் இப்போது சில ஆண்டுகளாக ஐபிஎல் விளையாடி வருகிறேன், வெளிப்படையாக ஒரு இளைஞனாக இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அது தற்போது நிறைவேறியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது எனக்குத் தெரியும். அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அனைவரும் வந்து இறுதிப் போட்டியில் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now