
மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்,
அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 28 ரன்களிலும், தீபக் ஹூடா 11 ரன்களிலும் விக்கெடை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் கேப்டன் கேஎல் ராகுலுடன் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தினர்.
அதன்பின் 75 ரன்களில் நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை இழக்க, 55 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுலும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயூஷ் பதோனி 22 ரன்களையும், குர்னால் பாண்டியா 12 ரன்களையும் சேர்க்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களைச் சேர்த்தது. மும்பை தரப்பில் நுவான் துஷாரா, பியூஷ் சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.