
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்பொட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் கேஎல் ராகுல் 20 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய படிக்கல் 6 ரன்களிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 24 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின்னர் 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 81 ரன்கள் எடுத்த நிலையில் குயின்டன் டி காக்கும் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஆயூஷ் பதோனியும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். இச்சூழலில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், அடுத்தடுத்து சிக்சர்களை விளாசி மிரட்டினார்.