
இந்தியாவில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சீசனை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
அதன்படி அந்த அணி இந்த தொடரில் விளையாடிய 4 போட்டிகளில் மூன்று வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் சந்தித்து புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் தொடர்ந்து வருகிறது. அதிலும் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்த அந்த அணி, கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த அணியின் பேட்டிங்கில் சுனில் நரைன், பில் சால்ட், ஆண்ட்ரே ரஸல் போன்ற வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேசமயம் காயம் காரணமாக அணியின் துணைக்கேப்டன் நிதீஷ் ரானா அடுத்தடுத்த போட்டிகளை தவறவிட்ட நிலையில், அவரது இடத்தில் களமிறக்கப்பட்ட அறிமுக வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷியும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.