யுவராஜ் சிங், பிரையன் லாராவிற்கு நன்றி கூற வேண்டும் - அபிஷேக் சர்மா!
நடப்பு ஐபிஎல் தொடரில் நான் அதிரடியாக விளையாட உதவிய யுவராஜ் சிங் மற்றும் பிரையன் லாரா இருவருக்கும் எனது நன்றியை தெரிவிக்க வேண்டும் என சன்ரைசர்ஸ் அணியின் இளம் வீரர் ஆபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஆயூஷ் பதோனி 55 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 48 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 16 பந்துகளிலும், அபிஷேக் சர்மா 19 பந்துகளிலும் தங்கள் அரைசதத்தைப் பதிவுசெய்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 89 ரன்களையும், அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என 75 ரன்களையும் சேர்த்து மிரட்டினர்.
Trending
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து மிரட்டியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது 7ஆவது வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி பிளா ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டி முடிந்து பேசிய அபிஷேக் சர்மா, “எங்கள் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் அணியின் பயிற்சியாளர், உதவிப் பணியாளர்கள் யோசிப்பதைப் போன்று வேறு யாரும் யோசித்து நான் பார்த்ததில்லை. எனது இயல்பான ஆட்டத்தை மகிழ்ச்சியாக வெளிப்படுத்த அவர்கள் எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்கள். உன்னால் முடிந்தவரை அதிரடியாக விளையாடு என்ன ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம் என அவர்கள் எனக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.
இன்றைய போட்டியில் நான் அதிரடியாக விளையாடியதற்கு டிராவிஸ் ஹெட்டுக்கு தான் அனைத்து பாராட்டுகளும் சேர வேண்டும். அவர் எப்போதும் அதிரடியாக விளையாடிய பவுண்டரிகளை குவித்து வருவது என்மீதான அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் என்னுடைய இந்த வெற்றிக்கு யுவராஜ் சிங்கும், கிரிக்கெட் வீரர் பிரைன் லாராவும் தான் காரணம். என்னுடைய தந்தை தான் என்னுடைய முதல் பயிற்சியாளர் அவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now