
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்றைய தினம் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி தொடக்கத்திலேயே எடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் வெங்கடேஷ் ஐயர் மற்றும் மனீஷ் பாண்டே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக மனீஷ் பாண்டே 42 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 70 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் எதிர்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் நட்சத்திர வீரர்கள் இஷான் கிஷான் 13 ரன்களுக்கும், ரோஹித் சர்மா மற்றும் நமந்தீர் ஆகியோர் தலா 11 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினாலும், மறுபக்கம் களமிறங்கிய திலக் வர்மா,நெஹால் வதேரா, கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடுதடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதேசமயம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவும் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டிம் டேவிட், பியூஷ் சாவ்லா, ஜெரால்ட் கோட்ஸி போன்ற வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 18.5 ஓவர்களிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைட்ரஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.