
ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 56ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக அபிஷேக் போரல் 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், பட்லர் 19 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தார். அதன்பின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அவருக்கு துணையாக ரியான் பராக் 27 ரன்களிலு, ஷுபம் தூபே 25 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இருப்பினும் தொடர்ந்து தனி ஆளாக போராடிய சஞ்சு சாம்சன் 86 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ரோவ்மன் பாவெல், டோனவன் ஃபெரீரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.