ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : குஜராத்தை பின்னுக்கு தள்ளியது பஞ்சாப் கிங்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அஹ்மதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களை சேர்த்து அசத்தியது.
இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் 48 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 89 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு துணையாக தமிழக வீரர் சாய் சுதர்ஷன் 6 பவுண்டரிகளை விளாசி 33 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த ராகுல் திவேத்தியா 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 21 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான் ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்ஷிம்ரன் சிங், சிக்கந்தர் ரஸா, சாம் கரண், ஜிதேஷ் சர்மா போன்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த ஷஷாங்க் சிங் - அஷுதோஷ் சர்மா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 61 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஷஷாங்க் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
#IPL2024 Points Table After #PunjabKings' Win Over #GujaratTitans pic.twitter.com/HRSVqQ9CAy
— CRICKETNMORE (@cricketnmore) April 4, 2024
இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு சீசன் ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் இப்போட்டியில் தோல்வியைத் தழுவிய குஜராத் டைட்டன்ஸ் அணி 4 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. அதேசமயம் ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now