ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ராஜஸ்தானை வீழ்த்தி முன்னேற்றம் கண்டது குஜராத்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி மோதியது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது.
இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்கம் ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் 10 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் - ரியான் பராக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் கடக்க, 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 68 ரன்களையும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 76 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் ரஷித் கான், உமேஷ் யாதவ், மோஹித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 35 ரன்களைச் சேர்த்திருந்த சாய் சுதர்ஷன் தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மேத்யூ வேட் 4 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த ஷுப்மன் கில் 72 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாலும், இறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திவேத்தியா, ரஷித் கான் இருவரும் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Things are heating up in the points table!#IPL2024 #GTvRR #RRvGT #Cricket pic.twitter.com/3NyM5NbOOC
— CRICKETNMORE (@cricketnmore) April 10, 2024
இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் இந்த சீசனில் அந்த அணி மூன்று வெற்று மற்றும் மூன்று தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளைப் பெற்று ரன் ரேட் அடிப்படையில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் தோல்வியைச் சந்தித்தாலும், தொடர்ந்து பட்டியலின் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now