
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷான் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - ரோஹித் சர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ரோஹித் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த சூர்யகுமார் யாதவும் 78 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் திலக் வர்மா 34 ரன்களையும், டிம் டேவிட் 14 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் சாம் கரண் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணியானது விளையாடி வருகிறது.