
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 65ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரயால்ஸ் அணியை எதிர்பார்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. கௌகாத்தில் உள்ள பர்சபர கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், அறிமுக வீரர் டாம் கொஹ்லர் காட்மோர் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பவுண்டரியுடன் இன்னிங்ஸைத் தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்த நிலையில் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதன்பின் காட்மோருடன் இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 18 ரன்களில் சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
அவரைத்தொடர்ந்து தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டாம் கொஹ்லர் காட்மோரும் 18 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, ராஜஸ்தான் அணி 42 ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த ரியான் பராக் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இணை பொறுப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் அஸ்வின் 28 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய துருவ் ஜூரெல் ரன்கள் ஏதுமின்றியும், ரோவ்மன் பாவெல் 4 ரன்களிலும், டொனவன் ஃபெரீரா 7 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.