ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 1 : சன்ரைசர்ஸை 159 ரன்களில் சுருட்டியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் போட்டியில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைப் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே கிளின் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவும் 3 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரெட்டி 9 ரன்களிலும், ஷபாஸ் அஹ்மத் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
Trending
பின்னர் இணைந்த ராகுல் திரிபாதி மற்றும் ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் 100 ரன்களைத் தாண்டியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திரிபாதி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹென்ரிச் கிளாசென் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் திரிபாதியும் 55 ரன்களில் தேவையின்றி ரன் அவுட்டாகினார். பின்னர் வந்த சன்வீர் சிங் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய அப்துல் சமத் 16 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து புவனேஷ்வர் குமாரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இருப்பினும் ஒருபக்கம் நங்கூரம் போல் நின்ற கேப்டன் பாட் கம்மின்ஸ் இறுதிவரை களத்தில் நின்றதுடன் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், வருன் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now