
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்றுவரும் 15ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. பெங்களூருவிலுள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக முடிவுசெய்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் - கேப்டன் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குயின்டன் டி காக் வழக்கம் போல் அதிரடியாக தொடங்க, மறுபக்கம் அதிரடியாக விளையாட முயற்சித்த கேஎல் ராகுல் 2 சிக்சர்களை விளாசிய நிலையில் 20 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய உள்ளூர் வீரரான தேவ்தத் படிக்கல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பந்துகளை எதிர்கொண்டு 6 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த குயின்டன் டி காக இப்போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தினார். அவருக்கு துணையாக மார்கஸ் ஸ்டொய்னிஸும் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 24 ரன்களை விளாசிய நிலையில் கிளென் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் மயங்க் தாகரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குயின்டன் டி காக் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் சதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 81 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.