ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 62ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்ஸர் படேல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் முதல் ஓவரிலிருந்தே அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 27 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இணைந்த வில் ஜேக்ஸ் - ராஜத் பட்டிதார் இணை அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசித் தள்ளினர். இதன்மூலம் அணியின் ஸ்கோரும் 100 ரன்களைத் தாண்டியாது.
Trending
இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ராஜத் பட்டிதார் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 5ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 52 ரன்கள் சேர்த்த நிலையில் ராஜத் பட்டிதாரும், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 41 ரன்கள் எடுத்த நிலையில் வில் ஜேக்ஸும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த கேமரூன் க்ரீன் - மஹிபால் லாம்ரோர் இணையும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியது. இதில் லாம்ரோர் 13 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்தி ரன்கள் ஏதுமின்றியும் என கலீல் அஹ்மத் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்வப்னில் சிங் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கரண் சர்மாவும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை களத்தில் இருந்த கேமரூன் க்ரீன் 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் கலீல் அஹ்மத், ரஷிக் தார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு டேவிட் வர்னர் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தன. இதில் டேவிட் வார்னர் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அபிஷேக் போரலும் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 21 ரன்களைச் சேர்த்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து வந்த குஷாக்ராவும் 2 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஷாய் ஹோப் - கேப்டன் அக்ஸர் படேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசித்தள்ளினர். இதில் சிறப்பாக விளையாடிய ஷாய் ஹோப் 29 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸும் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் அக்ஸர் படேல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அக்ஸர் படேல் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தார். இதனால் அந்த அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆர்சிபி அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றதுடன், பிளே ஆஃப் வாய்ப்பிலும் நீடித்து வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now