
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடியது. சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். ஏற்கெனவே இத்தொடரில் லக்னோ அணியிடம் தோல்வியைத் தழுவிய சிஎஸ்கே அணி அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியில் களமிறங்கியது.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - அஜிங்கியா ரஹானே ஆகியோர் களமிறங்கினர். இதில் ரஹானே ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் முதல் ஓவரிலேயே பெவிலியன் திரும்பினார். மறுபக்கம் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் முதலே ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய டேரில் மிட்செல் 11 ரன்களில் ஆட்டமிழந்து மீன்டும் ஏமாற்றமளித்தார். பின்னர் ருதுராஜுடன் இணைந்த ரவீந்திர ஜடேஜா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.
இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்து அசத்தினார். பின் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் தூபே வழக்கம் போல் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதுவரை பவுண்டரிகளை மட்டுமே அடித்து வந்த ருதுராஜ் கெய்க்வாட்டும் சிக்ஸர்களை விளாச இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தாண்டியது. பின் ருதுராஜ் கெய்க்வாட் 56 பந்துகளில் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.