
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்திய ரசிகர்களால் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் இத்தொடரில் உலகின் அனைத்து நட்சத்திர வீரர்கள் ஒன்றுசேர்ந்து விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல்ச் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது.
அதிலும் இப்போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் காத்திருக்கின்றனர். அதேசமயம் ஐபிஎல் தொடரின் மற்ற அணிகளும் தங்களது லீக் சுற்றுக்கு தயாராகும் வகையில் பயிற்சியை தொடக்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அதிரடி முடிவுகளை எடுத்துள்ளனர்.
அதன்படி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் ஐடன் மார்க்ரம் தலைமையில் களமிறங்கிய ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் வீரர்கள் மீனி ஏலத்தில் பாட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்த ஹைதராபாத் அணி அவரை தற்போது கேப்டனாகவும் நியமித்துள்ளது.