ஐபிஎல் 2024: மெக்குர்க் அதிரடி வீண், நடராஜன் அபார பந்துவீச்சு; டெல்லியை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்துவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இந்த இன்னிங்ஸின் முதல் ரன்களையே சிக்ஸரின் மூலம் பெற்ற டிராவிஸ் ஹெட் அதன்பின் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினார். அதேசமயம் மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடிய அபிஷேக் சர்மா கிடைக்கும் பந்துகளில் தனது பங்கிற்கு சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். இதில் அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் 5 ஓவர்களிலேயே தங்களது 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் 6 ஓவர்களில் 125 ரன்களை குவித்து ஐபிஎல் தொடர் வரலாற்றில் பவர்பிளேவில் அதிக ரன்களை குவித்த அணி எனும் சாதனையையும் படைத்தார்.
Trending
பின்னர் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 10 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 46 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஐடன் மார்க்ரமும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இப்போட்டியில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் 11 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 89 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து வந்த ஹென்ரிச் கிளாசென் தனது பங்கிற்கு 2 சிக்ஸர்களை அடித்து 15 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இதனால் ஹைதராபாத் அணியின் சொந்த சாதனையை உடைக்கும் முயற்சியும் தகர்ந்தது. பின்னர் இணைந்த நிதீஷ் ரெட்டி - ஷபாஸ் அஹ்மத் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். ஒருகட்டத்திற்கு மேல் இருவரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் 200 ரன்களை கடந்தது. பின் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்கள் எடுத்த நிலையில் நிதீஷ் ரெட்டி ஆட்டமிழக்க, அடுத்து வந்த அப்துல் சமத் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷபாஸ் அஹ்மத் 28 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன் 59 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார்.
இதன்மூல 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களைச் சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 55 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பிரித்வி ஷா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். முதல் ஓவரின் முதல் 4 பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசிய பிரித்வி ஷா அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அணியின் மற்றொரு அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னரும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் - அபிஷேக் போரல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இவர்களது அதிரடியின் காரணமாக டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 88 ரன்களைக் குவித்தது. அதிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளிய ஜேக் ஃபிரெசர் மக்குர்க் 15 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், நடப்பு ஐபிஎல் சீசனில் அதிவேக அரைசதமடித்த வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.
பின் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக்குர்க் 18 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 65 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் போரல் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 42 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 10 ரன்களுக்கும், லலித் யாதவ் 7 ரன்களுக்கும் என அடுதடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தோல்வியும் அந்த இடத்திலேயே உறுதியானது.
அதன்பின் களமிறங்கிய அக்ஸர் படேல், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, குல்தீப் யாதவ் ஆகியோரும் அடுத்தடுத்து நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் 46 ரன்கள் எடுத்த நிலையில் ரிஷப் பந்தும் விக்கெட்டை இழக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹைதராபாத் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய நடராஜன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now