
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து எஸ்ஆர்எச் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிராவிஸ் ஹெட் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினார். இதனால் 20 பந்துகளிலேயே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 108 ரன்கள் சேர்த்த நிலையில், 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 34 ரன்களைச் சேர்த்திருந்த அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு அதிரடி நாயகன் ஹென்ரிச் கிளாசென் இப்போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கினார்.
மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். பின் 9 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 102 ரன்கள் எடுத்த நிலையில் டிரேவிஸ் ஹெட் ஆட்டமிழக்க, அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்பும் விதமாக ஹென்ரிச் கிளாசென் சிக்ஸர் மழை பொழிந்து 23 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். அதன்பின் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்களை விளாசி 67 ரன்கள் எடுத்திருந்த ஹென்ரிச் கிளாசெனும் தனது விக்கெட்டை இழந்தார்.அதன் பின்னர் மார்க்ரமுடன் இணைந்த அப்துல் சமதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.