
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்துவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இன்றைய போட்டிக்கான டெல்லி அணியில் டேவிட் வார்னர், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தது.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இந்த இன்னிங்ஸின் முதல் ரன்களையே சிக்ஸரின் மூலம் பெற்ற டிராவிஸ் ஹெட் அதன்பின் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினார். அதேசமயம் மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடிய அபிஷேக் சர்மா கிடைக்கும் பந்துகளில் தனது பங்கிற்கு சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். இதில் அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் 5 ஓவர்களிலேயே தங்களது 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் 6 ஓவர்களில் 125 ரன்களை குவித்து ஐபிஎல் தொடர் வரலாற்றில் பவர்பிளேவில் அதிக ரன்களை குவித்த அணி எனும் சாதனையையும் படைத்தார். பின்னர் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 10 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 46 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஐடன் மார்க்ரமும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.