
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி ரசிகர்களுக்கு ராஜவிருந்து என்றே தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 287 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை பதிவுசெய்தது.
அதன்படி இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 102 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 67 ரன்களையும், அப்துல் சமாத் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களையும், அபிஷேக் சர்மா 34 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 32 ரன்களையும் என களமிறங்கிய அனைத்து வீரர்களும் சுமார் 150 ஸ்டிரைக் ரேட்டிற்கு மேல் விளாசி தள்ளினர்.
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி எனும் தன்னுடைய சாதனையை தனே முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதேசமயம் இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் பந்துவீசிய மஹிபால் லாம்ரோர் மற்றும் வில் ஜேக்ஸ் ஆகியோரைத் தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் 50 ரன்களுக்கு மேல் ரன்களை வாரி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.