
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 35ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தியது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
ஆனால் இந்த முடிவை ஏன் எடுத்தோம் என்ற நிலைக்கு தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தள்ளப்பட்டுள்ளார். ஏனெனில் டாஸை இழந்து முதலில் பேட்டிங்கைத் தொடங்கியுள்ள சன்ரைசர்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது சொந்த சாதனையை முறியடிக்கும் முயற்சியில் இன்றைய போட்டியை எதிர்கொண்டுள்ளது அந்த அணியின் தொடக்க வீரர்களின் ஆட்டத்தை காணும் போதே தெரியவந்துள்ளது. அந்தவகையில் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை களமிறங்கினர்.
இதில் இருவரும் முதல் பந்தில் இருந்தே ஒவ்வோரு பந்திலும் பவுண்டரியையும், சிக்ஸரையும் விளாசித்தள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஒவ்வொரு பந்துவீச்சாளர்களும் இன்றைய போட்டியில் எதற்காக பந்துவீச வந்தோம் என யோசிக்கும் அளவிற்கு சென்றுள்ளனர். இந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிவரும் டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, அவருக்கு துணையாக விளையாடி வந்த அபிஷேக் சர்மாவும் கிடைக்கும் ஒருசில பந்துகளையும் பவுண்டரி, சிக்ஸர்களுக்கு விளாசி தள்ளினார்.