
ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 47ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் முதல் மூன்று பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி அதிரடி காட்டிய பிரித்வி ஷா 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு அதிரடி தொடக்க வீரரான ஜேக் ஃபிரேசர் மெக்குர்கும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என விளாசிய நிலையில் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய் ஷாய் ஹோப் 6 ரன்களுக்கும், அபிஷேக் போரெல் 18 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 68 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் இணைந்த கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் அக்ஸர் படேல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் அதிரடியாக விளையாட முயற்சித்த ரிஷப் பந்த் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 27 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். அவர்களைத் தொடர்ந்து 15 ரன்கள் எடுத்த நிலையில் அக்ஸர் படேலும், இம்பேக் வீரராக களமிறங்கிய குமார் குஷாக்ரா ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க டெல்லி அணி 111 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.