
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக தங்களது நான்காவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது விராட் கோலியின் சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 12 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் என 113 ரன்களைச் சேர்த்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் - ஜோஸ் பட்லர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் தனது சதத்தைப் பதிவுசெய்ததுடன், அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் தொடரில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்த ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் ஜோஸ் பட்லர் தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.