ஐபிஎல் 2025: அணியை சரிவிலிருந்து மீட்ட ஸ்டப்ஸ், அஷுதோஷ்; சன்ரைசர்ஸுக்கு 134 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் 134 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக போராடி வருகின்றன.
இன்று நடைபெற்ற 55ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில் கருண் நாயர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஃபாஃப் டூ பிளெசிஸும் 3 ரன்களுடன் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய அபிஷேக் போரல் 8 ரன்களுக்கும், அணியின் கேப்டன் அக்ஸர் படேல் 6 ரன்களுக்கும், கேஎல் ராகுல் 10 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கி அதிரடியாக விளையாட முயற்சித்த விப்ராஜ் நிகமும் 18 ரன்களில் விக்கெட்டை இழக்க,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 62 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அஷூதோஷ் சர்மா இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
Also Read: LIVE Cricket Score
இதில் இறுதியில் அதிரடியாக விளையாடி வந்த அஷுதோஷ் சர்மா 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 41 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், உனாத்கட், ஹர்ஷல் படேல், மலிங்கா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now