ஐபிஎல் 2025: அஷுதோஷ், விப்ராஜ் அபாரம்; லக்னோவை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
விசாகப்பட்டினத்தில் உள்ள விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். பின்னர் இப்போட்டியில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஐடன் மார்க்ரம் விக்கெட்டை இழந்தார்.
Trending
அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் 21 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய நிக்கோலஸ் பூரனும் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்தார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அதிரடியாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 72 ரன்களை எடுத்த கையோடு நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்தும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இதற்கிடையில் அரைசதம் கடந்திருந்த நிக்கோலஸ் பூரன் 6 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 75 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ஆயூஷ் பதோனி, ஷர்தூல் தாக்கூர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் டேவிட் மில்லர் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி 27 ரன்களைச் சேர்க்க, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அபிஷேக் பொரெல் ரன்கள் ஏதுமின்றியும், சமீர் ரிஸ்வி 4 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் டூ பிளெசிஸுடன் இணைந்த கேப்டன் அக்ஸர் படேல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இதில் சிறப்பாக விளையாடி வந்த அக்ஸர் படேல் 3 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 29 ரன்களை எடுத்த கையோடு டூ பிளெசிஸும் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - அஷுதோஷ் சர்மா இணை விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அடுதடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
இதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் விப்ராஜ் நிகம் யாரும் எதிர்பார்க்காத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நம்பிக்கையளித்தார். இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விப்ராஜ் நிகாம் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 39 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி வெற்றிக்கு கடைசி 9 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
Also Read: Funding To Save Test Cricket
அப்போது களத்தில் இருந்த அஷுதோஷ் சர்மா அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்ததுடன் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். இதனால் கடைசி ஓவரில் அந்த அணி வெற்றிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் அஷுதோஷ் சர்மா சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஷுதோஷ் சர்மா 5 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 66 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now