
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
அந்தவகையில் நடப்பு சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் எந்தெந்த துறைகளில் வலிமையாக உள்ளன என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் சுழற்பந்து வீச்சு தாக்குதல்கள் மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது வலுவாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சுத் துறை மிகவும் சிறப்பாகத் தெரிகிறது.