
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் போட்டிகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் ஏதெனும் ஒரு வீரர் காயமடைவதும் தொடர்கதையாகி வருகிறது.
அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ருதுராஜ் கெய்க்வாட் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து அவருக்கு பதிலாக மும்பையைச் சேர்ந்த இளம் தொடக்க வீரர் ஆயுஷ் மத்ரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சிக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் அணியிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதன்மூலம் ருதுராஜ் கெய்க்வாட் இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதற்கேற்றவகையில் கடந்த போட்டியிலும் கூட ஷேக் ரஷீது எனும் இளம் வீரர் லெவனில் இடம்பிடித்ததுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இருப்பினும் அணியின் மிடில் ஆர்டரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டர்கள் மீண்டும் மீண்டும் ரன்களைச் சேர்க்க முடியாமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வருவது அணிக்கு பெரும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.