
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் 48 ரன்களையும், கேப்டன் ஷுப்மன் கில் 76 ரன்களையும், அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லரும் 64 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்தேவ் உனாத்கட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா 74 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.