
18ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அடுத்தடுத்த தோல்விக்களுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியைத் தழுவாமல் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு மோசமான செய்தி மற்றும் அதனால் ஒரு நற்செய்தியும் உள்ளது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்தார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.