
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர் ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் உள்ளிட்டோர் சோபிக்க தவறிய நிலையில், ரிஷப் பந்த் 63 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 30 ரன்களையும் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர். இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைச் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரான 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஷேக் ரஷீத் 27 ரன்களும், ரவீந்திரா 37 ரன்களும், திரிபாதி 9 ரன்களும், ஜடேஜா 7 ரன்களும், விஜய் சங்கர் 9 ரன்களும் எடுத்து விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் துபே 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 43 ரன்களையும், தோனி 4 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 26 ரன்களையும் சேர்க்க, சிஎஸ்கே அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.