ஐபிஎல் 2025: சதத்தை தவறவிட்ட பட்லர்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி டைட்டன்ஸ் த்ரில் வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலபப்ரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கருண் நாயர் மற்றும் அபிஷேக் போரல் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக தொடங்கிய அபிஷேக் போரல் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கருண் நாயருடன் இணைந்த கேஎல் ராகுல் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். பின் கேஎல் ராகுலும் தனது பங்கிற்கு 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 28 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரரான கருண் நாயரும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
Also Read
பின்னர் இணைந்த கேப்டன் அக்ஸர் படேல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 2 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என 31 ரன்களில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு 38 ரன்களை எடுத்திருந்த கேப்டன் அக்ஸர் படேலும் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய இளம் வீர்ர் விப்ரஜ் நிகாமும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத்தொடர்ந்து இம்பேக்ட் வீர்ராக களமிறங்கிய டோனவன் ஃபெரீராவும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். அதேசமயம் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த அஷுதோஷ் சர்மாவும் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இறுதில் கடைசி பந்தில் குல்தீப் யாதவ் பவுண்டரி அடிக்க, இதன் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களைச் சேர்த்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரஷித் கிருஷணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷுப்மன் கில் 7 ரன்களை மட்டுமே அடித்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் சுதர்ஷனுடன் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்ஷன் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஜோஸ் பட்லர் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்து அசத்தினார். மறுபக்கம் ரூதர்ஃபொர்டும் சிறப்பாக விளையாடி பவுண்டரிகளை விளாசியதன் மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்துடன் அணியின் வெற்றியையும் உறுதிசெய்தனர். இறுதியில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
Also Read: Funding To Save Test Cricket
இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 97 ரன்களைச் சேர்த்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட நிலையில், மறுபக்கம் ராகுல் திவேத்தியா அடுத்தடுத்து சிக்ஸரையும், பவுண்டரியையும் விளாசி 11 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 19.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. மேற்கொண்டு இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஜோஸ் பட்லர் கைப்பற்றினார்.
Win Big, Make Your Cricket Tales Now