
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்காத்த நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், கேகேஆர் அணியானது 6ஆவது தோல்வியைத் தழுவி 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் 6ஆம் இடத்தில் தொடர்கிறது. இதனால் கேகேஆர் அணி எஞ்சிய போட்டிகளில் வெற்றிபெற்றாலும், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் வருண் சக்ரவர்த்திக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றைய ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் எதிரணி வீரரிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாக போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதாமும், ஒரு கரும்புள்ளியையும் பிசிசிஐ அபராதாமாக விதித்துள்ளது.