
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் ஐடன் மார்க்ரம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கடந்த இரண்டு போட்டிகளிலும் அரைசதம் கடந்து அசத்திய மிட்செல் மர்ஷ் இன்றைய ஆட்டத்தில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தர். அதன்பின் மற்றொரு தொடக்க வீரர் ஐடன் மார்க்ரமும் அதிரடியாக விளையாடிய நிலையில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 28 ரன்களில் நடையைக் கட்டினார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் இந்த ஆட்டத்திலும் ஒற்றை இலக்க ரன்களில் தனது விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார். பின்னர் இணைந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஷ் பதோனி இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். இருவரும் இணைந்த 4ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், சிறப்பாக விளையாடி வந்த நிக்கோலஸ் பூரன் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினைத் தவறவிட்டார்.