
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நேற்று தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் இறுதியில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடருக்கு முன் நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தின் போது இந்திய வீரர் ஷர்தூல் தாக்கூரை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. அதன்பின் சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய ஷர்தூல் தாக்கூர், பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். அதில் அவர் 505 ரன்களையும், 35 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தி இருந்தார்.
இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணியில் மாற்று வீரராக நிச்சயம் இடம்பிடிப்பார் என்ற பேச்சுகளும் அடிப்பட்டன. அதற்கேற்ற வகையில் ஷர்தூல் தாக்கூர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார். மேற்கொண்டு எல்.எஸ்.ஜி முகாமில் ஜெர்சி அணிந்து பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவரது பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.