
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடரில் பேட்டர்களின் அதிரடிக்கு பஞ்சமில்லாத காரணத்தால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.
இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரைன் ரன்கள் ஏதுமின்றியும், குயின்டன் டி காக் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் இணைந்த கேப்டன் அஜிங்கியா ரஹானே மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷி இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே 11 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, அங்கிரிஷ் ரகுவன்ஷி 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் அணியின் நம்பிக்கையாக பார்க்கபட்ட ரிங்கு சிங், மனீஷ் பாண்டே மற்றும் ஆண்ட்ரே ரஸல் உள்ளிட்டோர் அடுத்தடுத்து அஷ்வினி குமார் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர்.