
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தானர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரியான் ரிக்கெல்டன் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என 40 ரன்களுக்கும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா 26 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.