ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒருபக்கம் டிராவிஸ் ஹெட் ரன்களைச் சேர்க்க தடுமாறிய நிலையில், மறுபக்கம் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்தளத்தை அமைத்தைக் கொடுத்தனர்.
Also Read
அதன்பின் அரைசதத்தை நெருங்கிய அபிஷேக் சர்மா 7 பவுண்டரிகளுடன் 40 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷானும் 2 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து 28 ரன்களை எடுத்த கையோடு டிராவிஸ் ஹெட்டும் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரும் நிதானமாக விளையாட ஸ்கோர் வேகமும் குறையத்தொடங்கியது. இதனால் 19 ரன்களை எடுத்திருந்த நிதீஷ் ரெட்டியும் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் ஹென்ரிச் கிளசென் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய நிலையில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் அனிகேத் வெர்மா அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசியதுடன் 18 ரன்களைச் சேர்க்க, பாட் கம்மின்ஸ் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வில் ஜேக்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றிருந்த ரோஹித் சர்மா பெரிய ஸ்கோரை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 சிக்ஸர்களுடன் 26 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரியான் ரிக்கெல்டனும் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த வில் ஜேக்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வந்த இருவரும் மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியதுடன் அணியின் வெற்றியையும் உறுதிசெய்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 26 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, வில் ஜேக்ஸ் தனது பங்கிற்கு 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 36 ரன்களில் ஆட்டமிழந்தர்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா - திலக் வர்மா இணை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். அதன்பின் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 21 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 21 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 181 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை வீழ்த்தி நடப்பு சீசனில் மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now