
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகின்றன.
இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடரவுள்ளது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேற்கொண்டு இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இந்த போட்டியில் வெற்றிபெறுவது அவசியமாகும்.
அதிலும் குறிப்பாக ஆர்சிபி அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறும். இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர், அணி மீண்டும் உற்சாகமடைந்துள்ளதாகவும், 2025 ஐபிஎல் லீக் கட்டத்திற்கு வலுவான முடிவைப் பெற மிகவும் உத்வேகத்துடன் இருப்பதாகவும் கூறிவுள்ளார்.